மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நள்ளிரவு முதல் அதிகாலை 2.15 மணி வரை நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆயுதமேந்திய குழுக்கள் பணியாளர்கள் மீது குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் பாதுகாப்புப் படைகளின் புறக்காவல் நிலையத்திற்குள் வெடித்தது. உயிரிழந்தவர்கள் நரஞ்சேனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர். "பாளையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மலை உச்சியில் இருந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இது நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை தொடர்ந்தது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் விவரங்கள்
தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் வீசினர். அதில் ஒன்று சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனின் அவுட்போஸ்ட்டில் வெடித்தது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இறந்தவர்கள் சிஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் என் சர்க்கார் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் அருப் சைனி என அடையாளம் காணப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஜாதவ் தாஸ் மற்றும் கான்ஸ்டபிள் அஃப்தாப் உசேன் ஆகிய இருவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். IRBn(இந்திய ரிசர்வ் பட்டாலியன்) முகாமுக்கு பாதுகாப்பு வழங்க CRPF வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.