தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது
அகில பாரத இந்து மகாசபாவுடன் தொடர்புடையதாகக் கூறிக்கொண்ட இருவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீர் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த வினேஷ் மற்றும் ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தாஜ்கஞ்ச் போலீஸ் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலே' என்ற சிவன் கோயிலாகக் கருதி பிளாஸ்டிக் பாட்டில்களில் புனித நீரை வழங்குவதாகக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வைரலான ஒரு வீடியோவில், ஒரு சுற்றுலா பயணியாக டிக்கெட் வாங்கிய பிறகு நினைவுச்சின்னத்தின் வளாகத்திற்குள் நுழைந்த குற்றவாளிகளில் ஒருவர், மூடிய படிக்கட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றுவதைக் காணலாம்.
இருவரையும் விடுவிக்க அகில பாரத இந்து மகாசபா வலியுறுத்தல்
தாஜ்மஹால் ஒரு நினைவுச்சின்னம் அல்ல, அது ஒரு சிவன் கோவில் என்றும், ஓம் என்ற ஸ்டிக்கரில் புனித நீர் ஊற்றப்பட்டது என்றும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குறித்தும் சிஐஎஸ்எஃப் எழுத்துப்பூர்வமாக தாஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தது. மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப், புராதன சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், சிவபெருமான் தனது கனவில் வந்து இதை சொன்னதாக கூறியதால்தான், அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இந்நிலையில், அகில பாரத இந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட், இருவரையும் காவல்துறை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.