LOADING...
ட்விஷா சர்மா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேதனை; சிபிஐ என்ட்ரி
ட்விஷா சர்மா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேதனை

ட்விஷா சர்மா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேதனை; சிபிஐ என்ட்ரி

எழுதியவர் Venkatalakshmi V
May 25, 2026
06:13 pm

செய்தி முன்னோட்டம்

போபாலில் கடந்த மே 12, தனது புகுந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான முன்னாள் மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கில் நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, சிபிஐ இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட தரப்போ தங்களது கருத்துக்களை ஊடகங்களில் வழங்கி விசாரணையைப் பாதிக்கக் கூடாது என்றும் SC உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்தது ஏன்?

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கணவர் சமர்த் சிங் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது தாயார் கிரிபாலா சிங் ஒரு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆவர். இதன் காரணமாக, நீதித்துறையே ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது போன்ற ஒரு தவறான பிம்பமும், கதையாடலும் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. இது எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது". "நீதித்துறை யாருக்கும் சாதகமாகச் செயல்படாது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை உறுதிப்படுத்தவே இந்த வழக்கை நாங்கள் நேரடியாகக் கையில் எடுத்துள்ளோம்." என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி

வழக்கின் முக்கியப் பின்னணி மற்றும் திருப்பங்கள்

நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மாவுக்கும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்கிற்கும் கடந்த 2025 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 5 மாதங்களே ஆன நிலையில், ட்விஷா 2 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மே 12 அன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம், சிசிடிவி காட்சிகளில் முறைகேடு, முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை குளறுபடிகள் எனப் பல சந்தேகங்களை ட்விஷாவின் குடும்பத்தினர் எழுப்பினர். மேலும், ட்விஷாவின் மாமியார் கிரிபாலா சிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதாகக் குற்றம் சாட்டி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் வீட்டின் முன்பு குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

Advertisement

இதுவரை

இதுவரை நடந்த சட்ட நடவடிக்கைகள்

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கணவர் சமர்த் சிங் மே 22 அன்று ஜபல்பூரில் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் குழுவினர் மூலமாக ஞாயிற்றுக்கிழமை ட்விஷாவின் உடலுக்கு இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே 12 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது சிபிஐ வசம் வழக்கு சென்றுள்ளதால், ட்விஷாவின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள 7 முக்கியக் கேள்விகளுக்கான உண்மையான விடை விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement