
தவெக ஆட்சியில் தண்டனை நிச்சயம்; கிட்னி திருட்டு குறித்து தவெக தலைவர் விஜய் ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
நாமக்கல்லில் பொதுமக்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான நடிகர் விஜய், சிறுநீரகத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினார். மாநிலத்தில் தனது கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் திட்டவட்டமாக உறுதியளித்தார். சிறுநீரகத் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களில் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், குறிப்பாக விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழைப் பெண்களைக் குறிவைத்து இந்தச் செயல் நடந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், சிறுநீரகத் திருட்டு என்பது திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது நாடறிந்த விஷயம் என்றும் அவர் ஏற்கனவே திருச்சியில் இது பற்றிக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
கந்துவட்டி
கந்துவட்டிக் கொடுமை
விஜய், இந்தக் குற்றங்களுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணத்தையும் சுட்டிக் காட்டினார். கந்துவட்டி கொடுமை மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தவறிய அரசாங்கத்தின் செயலால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுமே, மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கத் தள்ளப்படுவதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். விசைத்தறித் தொழிலாளர்களின் பொருளாதார நிலையையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களை, தமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியாகச் சேர்ப்போம் என்றும் விஜய் உறுதியளித்தார். தமது கட்சி ஆட்சி அமைந்தவுடன், சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.