LOADING...
மே 7-ல் தமிழக முதல்வராக பதவியேற்கிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது

மே 7-ல் தமிழக முதல்வராக பதவியேற்கிறாரா விஜய்?

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2026
05:06 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் தொடங்கியுள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, இந்திய அரசியல் அரங்கையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தவெக, 108 இடங்களை வென்ற போதிலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவதற்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளன. ஒரு 'தொங்கு சட்டமன்றம்' உருவான போதிலும், அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க கூறுவார் எனக்கணிக்கப்படுகிறது.

பதவியேற்பு

முதலமைச்சராகப் பதவியேற்கும் விஜய்

தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 7-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், பதவியேற்ற குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளது. இதற்காகப் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணிகளில் கட்சி மேலிடம் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

பனையூரில் நீண்ட நேர ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுடன் விஜய் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது மற்றும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement