மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு
மேற்கு வங்காளம், உத்கர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியினை சேர்ந்த பழங்குடியின சிறுமியினை கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று கால்வாயில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தினை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத காரணத்தினால் கலியாக்ஞ்ச் காவல் நிலையம் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிலிருந்த ஓர் கும்பல் காவல் நிலையத்திற்கு தீயினை வைத்துள்ளது. அந்த தீயானது மளமளவென பற்றி எரிந்த நிலையில், காவல் நிலையத்தில் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் எரிந்து சாம்பலானது. இதில் 2 காவல்துறையினர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு
இதற்கு முன்னதாக காவல் நிலையம் முன்பு கூடியிருந்த கும்பலை விரட்ட காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் பலனளிக்கவில்லை. இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது, கால்வாயில் கிடந்த இளம்பெண்ணின் உடலினை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், காவல் நிலையத்துக்குள் புகுந்து தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.