தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தமிழ்நாடு மாநிலம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று(மே.,8) வெளியானது. இந்த தேர்வினை எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டினை விட இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொது தேர்வினை எழுதிய ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவேணி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரேயா பயின்றுள்ளார். இவரின் தேர்ச்சி குறித்து செய்திகள் பரவிய நிலையில், பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
தேர்ச்சியடைந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா பேட்டி
இதுகுறித்து பேசிய திருநங்கை மாணவி ஸ்ரேயா, நான் தேர்ச்சியடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் தேர்ச்சிப்பெற உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய திருநங்கை சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக இந்த தேர்ச்சியானது அமைந்துள்ளது. எந்த திருநங்கையும் தவறான பாதைக்கு செல்லாமல் அனைவரும் கல்வியை நோக்கி தான் செல்லவேண்டும் என்பது தான் எனது ஆசை. என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் என்னை மாணவியாக மட்டும் தான் பார்த்தார்கள். யாரும் என்னை திருநங்கை என்று கூறி ஒதுக்கவில்லை. இப்பொழுது கல்லூரியில் பி.பி.ஏ.படிப்பில் சேரவுள்ளேன். அதனை முடித்துவிட்டு எம்.பி.ஏ.படிக்கவுள்ளேன். எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம். எனது படிப்பிற்கு அரசாங்கம் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.