பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம்
கர்நாடக மாநில காவிரியும், பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பரிசல்களில் சென்ற தமிழக மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்து கொண்டிருக்கையில், அப்பகுதிக்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து தமிழக மீனவர்கள் தப்பித்து ஓடியுள்ளார்கள். ஆனால் அவர்களுடன் வந்த கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை என்று தகவல்கள் வெளியானது. மேலும் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ராஜா உடலை கைப்பற்றிய போலீசார்-ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி ராஜா பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது. அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாலாற்றின் கரை பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ராஜாவின் உடல் உப்பிய நிலையில் இன்று(பிப்.,17) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தமிழக மக்கள் திரளாக சூழ்ந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. வனவிலங்குகளை வேட்டையாடினால் பிடித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடையுங்கள், இப்படி சுட்டு கொள்ளாதீர்கள் என்று கர்நாடக வனத்துறையினரிடம் தமிழக மக்கள் கூறியதாக தெரிகிறது. இப்பகுதியில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதிகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.