நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்
ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர். இந்த ஆண்டு கூட்டத்தில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளில் முன்னேற்றம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வு நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இந்த ஆண்டு ஜூன், செப்டம்பர் மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இந்திய-அமெரிக்க கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து விவாதித்ததை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் முன்னெடுத்து செல்வார்கள்" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் சொந்தமான இந்தோ-பசிபிக் பகுதி குறித்து விவாதிக்கப்படும்
2+2 உரையாடலைத் தவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் அந்தந்த அமெரிக்க அமைச்சர்களுடன் இருதரப்பு அளவிலான பேச்சுவார்தையையும் நடத்துவார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கும், திறந்த இந்தோ-பசிபிக் கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கும் இந்த சந்திப்பு பெரிதாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் என்பது இந்தியப் பெருங்கடல், தென் சீனக் கடல் உட்பட மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலை உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதியாகும். இந்த பகுதியில் சீனாவின் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகரித்து வருவதால், இந்த பகுதியை எல்லோருக்கும் சொந்தமான திறந்த இந்தோ-பசிபிக் பகுதியாக மாற்ற வேண்டும் என்று பல சக்திவாய்ந்த நாடுகள் விவாதித்து வருகின்றன.