தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி
செய்தி முன்னோட்டம்
கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.
இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வால் மக்கள் அதிகளவு பாதிப்படைவதை மனதில் கொண்டு தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகள், நடமாடும் காய்கறி அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் இதே போன்று தக்காளி விற்பனை 15 நியாயவிலை கடைகளிலும் பசுமை காய்கறி அங்காடியிலும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
தக்காளி
தக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
ஆனால், தற்போது கடந்த ஒரு வார காலமாக தூத்துக்குடி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் முன்னதாக 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று(ஆகஸ்ட்.,1) முதல் 500 நியாயவிலை கடைகளில் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
ஆனால் தூத்துக்குடியில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
மேலும், பண்ணை பசுமை அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
எனவே, இது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.