LOADING...
டிசம்பர் 21 இல் எஸ்ஐ தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
டிசம்பர் 21இல் எஸ்ஐ தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

டிசம்பர் 21 இல் எஸ்ஐ தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2025
05:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, டிசம்பர் 21, 2025 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், காவலர் காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகச் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

அறிவிப்பு

தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், டிசம்பர் 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் விண்ணப்பதாரர்கள் தீவிரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாலுகா மற்றும் ஆயுதப்படை பிரிவுகளில் காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்குச் சில நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் மற்றும் இதர விவரங்கள் TNUSRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.