LOADING...
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 கடைசி நாள்

குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
06:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த முதன்மைத் தேர்வு, தேர்வு அறை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த மறுதேர்வு மார்ச் 15, 2026 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அவகாசம்

தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி (W.P.No.7426 of 2026), குரூப் 2 முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றும், தொழில்நுட்பக் காரணங்களால் கட்டணம் செலுத்தத் தவறிய சில தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மறுவாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட தேர்வர்கள் வரும் மார்ச் 5, 2026 இரவு 11:59 மணிக்குள் தங்களது ஒருமுறைப் பதிவு (OTR) வாயிலாகத் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தலாம். இது தொடர்பாகத் தகுதியுள்ள தேர்வர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி

தேர்வு தேதி மற்றும் அனுமதிச்சீட்டு விவரம்

மார்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ள முதன்மைத் தேர்வில், குரூப்-2 A க்கான பாடப்பிரிவுத் தேர்வு மற்றும் குரூப் 2 & 2A க்கான கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு ஆகியவை இடம்பெறும். இதற்கான தேர்வு அனுமதிச்சீட்டு இன்னும் சில தினங்களில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏற்பட்ட குளறுபடிகளைத் தவிர்க்க இம்முறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தேர்வுக்களம்

தேர்வுக்களம் செயலியின் முக்கியத்துவம்

தேர்வர்களின் வசதிக்காகத் தமிழக அரசு அண்மையில் தேர்வுக்களம் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் டிஎன்பிஎஸ்சி மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி), சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (யுஎஸ்ஆர்பி) மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) ஆகிய அனைத்து வாரியங்களின் அறிவிப்புகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது மற்றும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது போன்ற பணிகளையும் இதன் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம்.

Advertisement