Loading...
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக புகார்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
10:02 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன. பில்லிங் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் மீட்டர் கணக்கீட்டுக் குறைபாடுகளே இந்தத் திடீர் கட்டண உயர்வுக்குக் காரணம் என்று தகவல்கள் வெளியான நிலையில், மின்நுகர்வோரின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை நேரடியாக மறுஆய்வு செய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை

அதிகாரிகளுக்கு மின்வாரியத் தலைவர் அருண் ராய் சுற்றறிக்கை

மின்வாரியத் தலைவர் அருண் ராய் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 2026 மாத மின் நுகர்வு மற்றும் கட்டண விகிதம் கணிசமாக அதிகரித்துள்ள 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளைக் கண்டறிந்து, அவற்றில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை

கள ஆய்வின் போது தலைமைப் பொறியாளர் 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர் 75 மின் இணைப்புகளையும், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50 மின் இணைப்புகளையும் நேரில் சென்று சரிபார்க்க வேண்டும்.

மேலும் உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை நேரடி ஆய்வு செய்வார்கள்.

இந்த நேரடி மறுஆய்வுப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டுத் தலைமையகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT