Loading...
மின் பற்றாக்குறையால் 8 மணி நேர மின்தடையா? தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய விளக்கம்
மின் பற்றாக்குறையால் 8 மணி நேர மின்தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின

மின் பற்றாக்குறையால் 8 மணி நேர மின்தடையா? தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
03:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாதாந்திர பராமரிப்பு நாட்களில் மின் தடையை 8 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி முற்றிலும் வதந்தி என மறுத்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் (TNPDCL), இது குறித்து விரிவான விளக்கமளித்துள்ளது. "மேற்கண்ட செய்திக் குறிப்பில் உள்ள தகவல் முற்றிலும் தவறானது. தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்புப் பணிகளுக்கான மின் நிறுத்தத்தை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயித்துள்ளது. இந்தக் கால அளவைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

விளக்கங்கள்

மின்சார வாரியம் அளித்துள்ள முக்கிய விளக்கங்கள்

பராமரிப்பு பணிகளின் போது ஏதேனும் புதிய பழுதுகள் அல்லது எதிர்பாராத கோளாறுகள் கண்டறியப்பட்டால் மட்டுமே, அதைச் சரிசெய்யச் சில இடங்களில் கூடுதலாகச் சிறிதளவு கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பகுதி நுகர்வோருக்கு கட்டாயம் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

பகல் நேரங்களில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையை விட மின்சார இருப்பு உபரியாகவே உள்ளது.

திட்டமிடப்பட்ட மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களும் மின் நுகர்வோரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மின்தடை மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு 'மின்னகம்' சேவை மையத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களையோ அணுகலாம் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT