தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் குடும்பத்தலைவிகளுக்கு'கலைஞர் மகளிர் உரிமை தொகை'திட்டத்தின்படி, மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் 24ம்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 36ஆயிரம் நியாயவிலை கடைகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது என்றும், இதற்கான விண்ணப்பப்படிவத்தினை ரேஷன்கடை பணியாளர்கள் வீடுகளுக்கேச்சென்று விநியோகிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழக அரசு சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை நிர்வாகம் அனுமதியளித்து அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 21வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்படிவம் சமர்ப்பித்து பதிவினை மேற்கொள்ளும் நிலையில், கடவுச்சொல் மொபைல் நம்பருக்கு வரும் என்பதால் மொபைல் போனினை பெண்கள் கையில் கட்டாயம் கொண்டு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் இயங்க உத்தரவு
அதே போல் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கையில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட அசலினை கையோடு கொண்டுவருமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் முகாம்கள் காலை 9.30 மணிமுதல் 1 மணிவரையும், 2 மணிமுதல் மாலை 5.30 வரையும் செயல்பட வேண்டும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த முகாம்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு 2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலோ, தங்கள் சொந்த உபயோகத்திற்காக கனரக வாகனங்கள், கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருந்தாலோ அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேறுசில காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மீண்டும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.