LOADING...
ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
05:56 pm

செய்தி முன்னோட்டம்

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்பொழுது ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும். இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கான வாய்ப்பு

தமிழகம் மற்றும் சென்னையில் மழைக்கான வாய்ப்புகள்

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (ஜூலை 5) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்

மீனவர்களுக்கான சூறாவளிக்காற்று எச்சரிக்கை

மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. இதனால் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

அவலாஞ்சி

அவலாஞ்சியில் பதிவான அதிகபட்ச மழை

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 சென்டிமீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாகக் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மற்றும் நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், உபாசியில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வால்பாறை மற்றும் சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement