தவெக கூட்டணியில் அதிமுக-வா? அதிரடி முடிவை எடுக்கபோகும் விசிக: தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபாலை அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் புதிய ஆட்சி அமைந்த சூழலில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளே இந்தப் பயணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதிமுக
சட்டப்பேரவையில் பிளவுபட்ட அதிமுக
அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பிற்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த சுமார் 34 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா மற்றும் லீமாரோஸ் மார்ட்டின் மூலமாக இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவும் தனித்தனியாக வந்த நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சி.வி. சண்முகம் மட்டும் தனியாக அவைக்கு வந்தது அதிமுக-வில் நிலவும் பிளவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
விசிக
பதவியேற்பு விழாவை புறக்கணித்த திருமாவளவன்
நேற்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு விசிக-வுக்கு நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டும், திருமாவளவன் அதில் கலந்துகொள்ளவில்லை. திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது மற்றும் தவெக கூட்டணியில் நிலவும் அதிகாரப் பகிர்வு சிக்கல்கள் விசிக-வை ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியுள்ளன. குறிப்பாகத் துணை முதலமைச்சர் பதவி மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி குறித்து நிலவும் இழுபறியே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
INDIA
INDIA கூட்டணியின் புதிய தலைமை?
"திமுக கூட்டணியா அல்லது இந்தியா கூட்டணியா என்பது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுக்கும்" எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் இந்தியா (INDIA) கூட்டணியைத் தவெக-வே வழிநடத்துகிறது என்ற பிம்பம் உருவாகியுள்ளது. டெல்லி பயணத்தின் போது, திமுக-வுக்கு எதிரான அரசியலை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுக்கக் கூடாது என்ற கோரிக்கையைத் திருமாவளவன் முன்வைக்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியலில் நிலவும் இந்த அதிரடி மாற்றங்கள், அடுத்த சில வாரங்களில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.