கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம்
வெளிமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தமிழ்நாடு மாநிலத்தில் தக்காளியின் விலை உயர்வானது மிகப்பெரும் உச்சத்தினை தொட்டுள்ளது. ஒருசில இடங்களில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.100க்குமேல் விற்பனை செய்யப்படும் காரணத்தினால் இல்லத்தரசிகளும், உணவகங்கள் நடத்துவோரும் கவலையடைந்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இக்கோரிக்கையினை ஏற்ற தமிழகஅரசு தற்போது கொள்முதல் விலைக்கே தக்காளியினை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக்கூட்டமானது இன்று(ஜூன்.,27)தலைமை செயலகத்தில் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள நடமாடும் காய்கறி அங்காடிகள் மற்றும் 65 பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கொள்முதல் விலையில் தக்காளியினை விற்பனைச்செய்ய முடிவுச்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.