அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; சொத்து விவரங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அரசு பணியாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையைப் பரிசீலித்து இ முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அரசு முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆன்லைன் தாக்கல்
IFHRMS இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973, விதி 7(3)-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள் தொடர்பான விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டமான (IFHRMS) இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பிற்கான காரணம்
அவகாசம் நீட்டிப்பிற்கான பின்னணி மற்றும் துறைத் தலைவர்களுக்கு உத்தரவு
முன்னதாக 2025 ஆம் ஆண்டிற்கான சொத்து விவரங்களை சமர்ப்பிக்க 2026 அக்டோபர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் அவகாசம் தேவை எனக் கூறி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தவறாமல் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பதை துறைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.