உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலார்களின் நலவாரியம் மூலமாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவித்தொகை அறிவித்துள்ளது, தமிழக அரசு. அதன்படி, ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியானது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், உறுப்பினர்களாக பதிவு செய்தவர்கள், குறிப்பாக 60 வயதிற்கு மிகாமல் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தால், அவர்களுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படும். இதற்காக அரசு சார்பில் ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி
தீவிர நோய்களான, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்று நோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்க வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் முதற்கட்டமாக உதவித்தொகை பெறுவார்கள். இந்த திட்டம், தற்போது மூன்று ஆண்டுகள் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி உதவி பெற விரும்பும் கட்டுமான தொழிலாளர்கள், தங்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, தீவிர நோய் பாதிப்பிற்கான அரசு மருத்துவர் சான்று, மற்றும் தற்போது மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, நலவாரிய ஆணையரிடம் மனு தரவேண்டும். அவர்களுக்கான நிதி உதவி, அவரவர் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.