தமிழக அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு: விதிகளில் அதிரடி திருத்தம்!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண் ஊழியர்களின் மகப்பேறு உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு தற்போது தனது அடிப்படை விதிகளில் இணைத்துள்ளது. இது அரசுப் பணியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
புதிய விதி
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்
365 நாட்கள் விடுப்பு: திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு இரண்டு அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அவருக்கு 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும். இரட்டை குழந்தைகள்: ஒரு பெண் ஊழியருக்கு முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும், அவர் தனது அடுத்த பிரசவத்திற்கு (இரண்டாவது முறை) 365 நாட்கள் வரை விடுப்பு எடுக்கத் தகுதியுடையவர். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்: ஏற்கனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அந்த பெண் ஊழியர் பிரசவ விடுப்பு கோரினால், அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு வழங்கலாம். இந்த விடுப்பைப் பிரசவத்திற்கு முன்போ அல்லது பின்போ எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.