LOADING...
தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே

தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2026
04:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியைக் கடுமையாகச் சாடிய கார்கேவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,"அதிமுக எப்படி மோடியுடன் இணைய முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. அவரது கட்சியும் சமத்துவம் மற்றும் நீதியில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அத்தகையோருடன் இணைவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

விளக்கம்

கருத்துக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர்

கார்கேவின் 'பயங்கரவாதி' என்ற விமர்சனம் நாடு முழுவதும் விவாதப் பொருளான நிலையில், உடனடியாக அதற்கு அவர் விளக்கம் அளித்தார். தான் குறிப்பிட்டது மோடியின் செயல்பாடுகளைத் தான் என்று கூறிய அவர், "பிரதமர் மோடி எப்போதும் தனது அரசியல் எதிரிகளை மிரட்டுகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய நிறுவனங்கள் அவர் கையில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எதிர்தரப்பை அவர் பயமுறுத்துகிறார் (Terrorising) என்பதையே நான் அவ்வாறு குறிப்பிட்டேன்" என்று விளக்கமளித்தார்.

எதிர்ப்பு

பாஜகவின் எதிர்ப்பு மற்றும் தேர்தல் களம்

கார்கேவின் இந்த கருத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டின் பிரதமரை இத்தகைய வார்த்தைகளால் விமர்சிப்பது அநாகரிகமானது என்றும், தோல்வி பயத்தால் காங்கிரஸ் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் கிளம்பியுள்ள இந்த சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் கார்கேவின் இந்தப் பேச்சு, தமிழகத் தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே மாதம் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

Advertisement