தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?
செய்தி முன்னோட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் வெடித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் அதிகாரப் போட்டி நிலவியது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்கள் மற்றும் பாஜக உடனான கூட்டணி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், தற்போது தனது 'தாய் கழகமான' திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
காரணம்
ஏன் இந்த முடிவு?
தன்னை கட்சியிலிருந்து நீக்கிய EPS-க்கு தேர்தல் களத்தில் கடும் சவாலை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஓபிஎஸ்-இன் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓபிஎஸ் திமுகவில் இணைவது, தென் தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது ஆதரவாளர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ்-க்கும் வேறு வழியில்லாத நிலை உருவானது. இந்த மாற்றம் அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இன்று காலை 11 மணியளவில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முறைப்படி திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவருக்கு போடிநாயக்கனூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.