தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்? ஆளுநரிடம் நேரம் கேட்ட தவெக
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்(TVK), ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக தமிழக ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்களே குறைவாக உள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக தீவிர அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும் விஜய், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் கடிதங்களைச் சமர்ப்பித்து, ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தவெக அலுவலகம் மற்றும் ஆளுநர் மாளிகை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூட்டணி
பிளான் பி: கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்
தனிப்பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவைப்படுவதால், தவெக தனது 'பிளான் பி' திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்படி, மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோரி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன: காங்கிரஸ் மற்றும் பாமக: தவெக அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் பாமக (4 இடங்கள்) ஆகியவை முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. பதிலுக்கு இரு கட்சிகளும் தலா இரண்டு அமைச்சர் பதவிகளைக் கோருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள்: இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிப்பது குறித்துத் தங்களுக்குள் ஆலோசித்து வருகின்றன, இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. விசிக மற்றும் தேமுதிக: திருமாவளவன் தலைமையிலான விசிக மற்றும் தேமுதிக ஆகியவை தேர்தல் முடிவுகளின் முழுமையான தாக்கத்தைப் பொறுத்துத் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன.
திராவிட கட்சி
திமுக மற்றும் அதிமுகவின் நிலை
முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிமுக 47 இடங்களைப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியடைந்திருப்பது திமுகவினரிடையே பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சியமைக்கப் போவது இதுவே முதல் முறை என்பதால், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் இப்போது தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.