LOADING...
தமிழக தேர்தல் 2026: இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! எதற்கெல்லாம் தடை? முழு விவரங்கள்
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

தமிழக தேர்தல் 2026: இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! எதற்கெல்லாம் தடை? முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
02:30 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது தேர்தல் முடியும் வரை நீடிக்கும். இதன் முக்கிய நோக்கம், ஆளுங்கட்சி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவர முற்படுவதைத் தடுப்பதும், அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு சமமான களத்தை உருவாக்குவதும் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளும் கட்டுப்பாடுகளும் உடனடியாக நடைமுறைக்கு வரும்:

பணப்புழக்கம்

நிதி மற்றும் பணப் புழக்கம்

உரிய ஆவணங்கள் இன்றி ஒரு நபர் ரூ. 50,000க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்லக் கூடாது. வணிகர்கள் அல்லது அவசரத் தேவைக்குக் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ரசீது அல்லது வங்கி ஆவணங்களைக் கையோடு வைத்திருக்க வேண்டும். வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், வேட்டி-சேலை, பாத்திரங்கள் அல்லது எந்தவிதமான இலவசப் பொருட்களையும் வழங்கவோ, விநியோகிக்கவோ கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

அரசு மற்றும் அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்

அரசு எவ்வித புதிய திட்டங்களையும், சலுகைகளையும் அறிவிக்கக் கூடாது. அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்படும். அமைச்சர்கள் தங்களது தேர்தல் பணிகளுக்காக அரசு வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது. அரசு நிதியில் அரசியல் தலைவர்களின் சாதனைகளை விளக்கும் பேனர்கள், அரசுப் பேருந்துகளில் உள்ள விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்படும்.

Advertisement

பொதுக்கூட்டங்கள்

பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள்

பிரச்சார வாகனங்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். ஜாதி அல்லது மத ரீதியான வெறுப்புப் பேச்சுகள் பேசுவது கடும் குற்றமாகக் கருதப்படும். வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.

Advertisement

சுவரொட்டிகள்

சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள்

பொது இடங்கள், மின் கம்பங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டவோ, விளம்பரங்கள் எழுதவோ கூடாது. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ய அந்த இடத்தின் உரிமையாளரிடம் முறையாக இசைவு பெற்று, அந்த நகலைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இடமாற்றம்

அதிகாரிகளின் இடமாற்றம்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை) தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட முடியாது. அவர்கள் அனைவரும் தற்காலிகமாகத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள்.

Advertisement