தமிழக தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணி முதல் தொடங்குகிறது. ECI வெளியிட்டுள்ள அட்டவணைப்படி வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, ஏப்ரல் 6 வரை மட்டுமே பெறப்படும். சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7 நடைபெறும். தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குவதால், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
வேட்பாளர்களுக்கான முக்கியக் கட்டுப்பாடுகள்
குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த இடைப்பட்ட நாட்களில் விடுமுறை தினங்கள் (மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி போன்றவை) வருவதால், வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய உண்மையில் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் எல்லைக்குள் அதிகபட்சமாக 3 வாகனங்களை மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு. மனுத் தாக்கலின் போது வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொதுப்பிரிவினர் ₹10,000 மற்றும் பட்டியல் இனத்தவர் (SC/ST) ₹5,000 வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்.