"எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசின் சார்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ஆம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான விழா, சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது. இரு தினங்கள் (ஜன.11, 12) நடைபெறும் இந்த விழாவில், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்த விழாவினை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், இரண்டாம் நாளான இன்று, அயலகத் தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
'எனக்கு உடம்பு சரியில்லையா?': முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமில்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுந்தியிருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. அதைவிட எனக்கு வேறு என்ன குறை இருக்க போகிறது" என தெரிவித்தார். "எனக்கு மக்களை பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். எனது சக்தியை மீறி உழைப்பவன் நான். எனவே இதுபோன்ற செய்திகளை ஒதுக்கிவிட்டு மக்களுக்காக உழைப்பேன்" எனவும் தெரிவித்தார்.