ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டினையொட்டி செப்.,9ம்தேதி இரவு நடக்கும் விருந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தலைமையில் இந்தாண்டு ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இதன் 18வது ஜி20 மாநாடு டெல்லியில் வரும் செப்.,9 மற்றும் 10 தேதிகளில் நடக்கவுள்ளது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவுக்கு வருகை தரும் சர்வதேச தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதற்கான அழைப்பினை ஏற்று இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9ம் தேதி டெல்லிக்கு புறப்படுகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநாடு
9 ஆண்டு ஆட்சியில் 'இந்தியா' என்னும் பெயரினை மட்டும் தான் மாற்ற முடிந்துள்ளது என விமர்சனம்
இதனிடையே இந்த விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசு தலைவர் என்று அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
மேலும், இந்த பெயர் மாற்ற விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியினை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 'இந்தியா' என்னும் கூட்டணியை துவங்கியதில் மத்திய அரசுக்கு அச்சொல் கசந்து விட்டது.
இந்தியாவினை வளர்ச்சிமிகு நாடாக மாற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய அரசால் 9 ஆண்டு கால அவகாசத்திற்கு பிறகு 'இந்தியா' என்னும் பெயரினை மட்டும் தான் மாற்ற முடிந்துள்ளது என்று முன்னதாக விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.