தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தபால் உறையினை வெளியிட்டு 'அவள்' என்னும் திட்டத்தினை துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பெண் காவலர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க 9 அறிவிப்புகளை அறிவித்தார். அவர் அறிவித்ததாவது, ரோல் கால் என்னும் காவல் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கென தனி ஓய்வறை கட்டி தரப்படும். மேலும் தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பெண் காவலர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேசிய மாநாடு
அதனை தொடர்ந்து அவர், கலைஞர் காவல் பணி விருது மற்றும் கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதனையடுத்து, பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை மற்றும் பணியிட மாறுதல் அளிக்க அறிவுறுத்தல் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண் காவலர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண காவல்துறையில் பெண்கள் என்னும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். அதோடு பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.