திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இது காட்டூரில் உள்ள தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோட்டத்தில் கலைஞரின் பொது வாழ்வினை சித்தரிக்கும் வகையிலான அருங்காட்சியகங்கள், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ரூ.12 கோடி செலவில், 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று(ஜூன்.,20) என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 10 மணி முதல் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது என்று செய்திகள் வெளியானது.
திறப்பு விழாவில் பங்கேற்றார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
திறப்பு விழாவினை முன்னிட்டு 2 தினங்களுக்கு முன்னரே திருவாரூருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இன்று காலை சாலமன் பாப்பையா நடத்திய பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். இதனையடுத்து மதியம் 3.30 மணிக்கு மேலாக கலைஞர் கோட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். அப்போது பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டு தீயினை அணைக்க வேண்டும். ஜனநாயக போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க உள்ளேன்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "மீண்டும் பாஜக'வை ஆள அனுமதிப்பது தமிழ்நாடு, தமிழ், இந்தியா ஆகியவற்றிற்கு கேடு" என்று உரையாற்றியுள்ளார்.