LOADING...
தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு
கே.ஏ.செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மாற்றி வழங்கப்பட்டுள்ளது

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2026
01:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக முக்கிய இலாகாவான நிதித்துறை, ஆர்.கே.நகர் MLA மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதி அமைச்சராக இருந்த சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மாற்றி வழங்கப்பட்டுள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பொறுப்பு

மரிய வில்சனுக்குக் கிடைத்த இமாலயப் பொறுப்பு

இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவும், ஜேப்பியார் மருமகனுமான மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பலரையும் கவனிக்க வைத்தது. ஆனால், பதவி ஏற்ற சிறிது நேரத்திலேயே அவருக்கு மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கல்வி மற்றும் தொழில் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், கார்ப்பரேட் பாணி நிதி மேலாண்மையைச் சிறப்பாகக் கையாள்வார் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர் விஜய் இந்த அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

துறை

செங்கோட்டையன் துறை மாற்றத்தின் பின்னணி

தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, 10 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. 78 வயதான மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, பட்ஜெட் தயாரிப்பு போன்ற நிதித்துறையின் அதீத பணிச்சுமையைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் அடிமட்ட கிராமப்புற நிர்வாக அமைப்புகளை விரல் நுனியில் வைத்துள்ள செங்கோட்டையனுக்கு, மக்கள் தொடர்புள்ள வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பொருத்தமாக இருக்கும் என விஜய் கணக்கு போட்டுள்ளார். அரசியல் அனுபவமிக்க செங்கோட்டையனுக்கு வருவாய்த் துறையும், பொருளாதார மேலாண்மை மிக்க மரிய வில்சனுக்கு நிதித்துறையும் பிரித்துக் கொடுத்திருப்பது ஒரு 'கார்ப்பரேட் ஸ்டைல் அட்மினிஸ்ட்ரேஷன்' ஆகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

சவால்கள்

புதிய நிதி அமைச்சரின் முன் உள்ள சவால்கள்

தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டைத் தயாரிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இப்போது நேரடியாகப் புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன் தோள்களில் விழுந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை, கடன் சுமைகளைச் சீரமைப்பது மற்றும் தவெக தேர்தல் நேரத்தில் அறிவித்த மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் உருவாக்குவது எனப் புதிய நிதி அமைச்சர் முன் பல சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Advertisement