பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ஒரு பகுதியாக சமூக மாற்றத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பங்காற்றிய வேலுநாச்சியார், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் நூலகத்துடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த கோட்டம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
மணிமண்டபம்
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்
தமிழ் திரையுலகில் மகத்தான கலைச் சாதனைகளைப் படைத்த இயக்குநர் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றும் விதமாக, அவரது சொந்த ஊரான தேனியில் ரூ.2.50 கோடி செலவில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அரசு சார்பில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து பாரதிராஜாவின் மனைவி ஒரு நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் கட்டப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு, அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை.#SunNews | #Bharathiraja | #Theni https://t.co/Ir5DbjOmRy pic.twitter.com/dRCnecrpkc
— Sun News (@sunnewstamil) August 25, 2026
தொழில்நுட்பம்
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஒற்றைச் சாளர முறை
சென்னை தரமணி எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.9.25 கோடியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும்.
மேலும் படப்பிடிப்பு அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள் மற்றும் அரங்க முன்பதிவுகளை சிரமமின்றி பெற ஒற்றைச் சாளர இணையதள வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ.5.75 கோடி வழங்கப்படும்.
மேலும், இணையத்தில் தமிழை வளர்க்கும் அறிஞர்களுக்கு 'இணைய தமிழ்ச்செம்மல்' விருதும், எல்லை போராட்டத் தியாகிகளுக்கான மாத உதவித்தொகை ரூ.7,500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னை அரசு மைய அச்சகத்தில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய காகிதக் கிடங்கு மற்றும் பொதுப் பண்டக சாலை ரூ.7.3 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ளது.