கன்னியாகுமரியில் பண்டிகைகளை முன்னிட்டு 3 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள், மகா சிவராத்திரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படும்.
அதே நேரத்தில் அய்யா வைகுண்டர் பிறந்தநாளும், மண்டையக்காடு பகவதி அம்மன் விழாவும் முறையே மார்ச் 4 மற்றும் மார்ச் 11 ஆம் தேதிகளில் நடைபெறும்.
பொதுமக்கள் திருவிழாவை கொண்டாட ஏதுவாக, இந்த நாட்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலைநாட்கள்
உள்ளூர் விடுமுறைக்காக மாற்று வேலைநாட்கள்
இருப்பினும், இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில், கன்னியாகுமரியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி விடுமுறைக்குப் பதிலாக மார்ச் 8 (சனிக்கிழமை), மார்ச் 4 ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக மார்ச் 22 (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 11 ஆம் தேதி விடுமுறைக்குப் பதிலாக ஏப்ரல் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) செயல்படும்.
உள்ளூர் விடுமுறை நாட்கள் இருந்தபோதிலும், மாவட்ட கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு சேவைகள், அவசர விஷயங்களைக் கையாள தேவையான ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.