30 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்; சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சைவ ஆலயமான நடராஜர் கோயிலுக்குள் வைணவத் தலமாக அமைந்திருக்கும் இந்தக் கோயில், ஒரே இடத்தில் சிவனையும் விஷ்ணுவையும் தரிசிக்கும் தனிச்சிறப்பைப் பெற்றதாகும். மேலும், இது 108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாகவும் திகழ்கிறது. கிழக்கு நோக்கிய இக்கோயிலில் புண்டரீகவள்ளி தாயார், ஆண்டாள் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
எட்டு கால பூஜைகள்
எட்டு கால பூஜைகள் நிறைவு
தொடர்ந்து எட்டு கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், திங்கட்கிழமை காலை 8வது கால பூஜை பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பட்டாச்சாரியார்கள் புனித நீர்க் கலசங்களைச் சுமந்து சென்று, ராஜ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றிச் சிறப்பாகக் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தராஜப் பெருமாளை வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.