LOADING...
நடுவழியில் கார் பேட்டரி செயல் இழந்தால் கவலை வேண்டாம்; காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?
நடுவழியில் கார் பேட்டரி செயல் இழந்தால் கவலை வேண்டாம்

நடுவழியில் கார் பேட்டரி செயல் இழந்தால் கவலை வேண்டாம்; காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 03, 2025
03:52 pm

செய்தி முன்னோட்டம்

காரின் பேட்டரி திடீரெனச் செயல் இழப்பது, குறிப்பாக அவசரமான நேரத்தில் அல்லது நீண்ட பயணத்திற்கு முன்பாக, கார் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சவாலாகும். ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது கிளிக் என்ற சத்தம் கேட்பது, ஹெட்லைட்கள் மங்கலாவது அல்லது பவர் விண்டோஸ் மெதுவாகச் செயல்படுவது போன்றவை பேட்டரி செயலழக்கும் நிலையை அடைந்துவிட்டதற்கான அறிகுறிகளாகும். இதுபோன்றச் சூழலில், காரை மீண்டும் இயக்க ஒரு விரைவான தீர்வாக ஜம்ப் ஸ்டார்ட் (Jump Start) செய்வது உதவுகிறது. இது சிக்கலானதாகத் தோன்றினாலும், சரியான கருவிகளுடன் கவனத்துடன் மேற்கொண்டால், இது மிகவும் எளிதான ஒரு செயல்முறையாகும்.

ஜம்ப் ஸ்டார்ட்

ஜம்ப் ஸ்டார்ட் செய்வதற்கான வழிமுறைகள்

ஜம்ப் ஸ்டார்ட் செய்வதற்குத் தேவையான முக்கியக் கருவிகள், நல்ல நிலையில் உள்ள பேட்டரி கொண்ட இரண்டாவது வாகனம் மற்றும் ஜம்பர் கேபிள்கள் ஆகும். செயல் இழந்த பேட்டரி கொண்ட காருக்கு அருகில், நல்ல பேட்டரி கொண்ட இரண்டாவது காரை நிறுத்தவும். இரண்டு கார்களின் பேட்டரி முனைகளும் மிக அருகில் இருப்பதை உறுதிசெய்யவும். ஆனால், கார்கள் ஒன்றுக்கொன்று தொடாமல் இருக்க வேண்டும். பெரும்பாலான கார்களில் பேட்டரி என்ஜின் பெட்டியின் உள்ளே இருக்கும். பேட்டரி முனைகளில் '+' (பாசிட்டிவ்) மற்றும் '-' (நெகட்டிவ்) குறிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும். பாசிட்டிவ் முனையில் சிவப்பு நிற கம்பியும், நெகட்டிவ் முனையில் கருப்பு நிறக் கம்பியும் இணைக்கப்பட்டிருக்கும். ஜம்பர் கேபிள்களும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணக் கிளிப்களைக் கொண்டிருக்கும்.

கேபிள்கள்

ஜம்பர் கேபிள்களை இணைக்கவும்

முதலில், நல்ல பேட்டரி கொண்ட காரின் இக்னிஷனை அணைக்கவும் (Turn Off). ஜம்பர் கேபிளின் சிவப்பு கிளிப்பை, செயலழந்த பேட்டரியின் பாசிட்டிவ் (+) முனையுடன் இணைக்கவும். அதே கேபிளின் மற்றொரு சிவப்பு கிளிப்பை, நல்ல பேட்டரியின் பாசிட்டிவ் (+) முனையுடன் இணைக்கவும். அடுத்து, நல்ல பேட்டரியின் நெகட்டிவ் (-) முனையில் கருப்பு கிளிப்பை இணைக்கவும். கடைசியாக, செயலழந்த பேட்டரி கொண்ட காரின் என்ஜின் ஹூட்டின் கீழ் இருக்கும் வண்ணம் பூசப்படாத, உலோகப் பகுதியுடன் மீதமுள்ள கருப்பு கிளிப்பை இணைக்கவும். இந்தச் சமயத்தில், எந்தக் கிளிப்புகளும் ஒன்றுக்கொன்று தொடாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

என்ஜின் 

என்ஜினை ஸ்டார்ட் செய்யவும்

நல்ல பேட்டரி கொண்ட காரின் என்ஜினை ஸ்டார்ட் செய்து, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சும்மா ஓட விடவும். இது செயலழந்த பேட்டரிக்குச் சிறிது சார்ஜ் ஏற உதவும். இப்போது, செயலிழந்த காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கவும். உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், முதல் காரை மேலும் 10 முதல் 15 நிமிடங்கள் ஓடவிட்டு மீண்டும் முயற்சிக்கவும். கார் ஸ்டார்ட் ஆனதும், அது ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஜம்பர் கேபிள்களைப் பாதுகாப்பாகத் துண்டிக்கவும். முதலில், செயலழந்த காரின் உலோகப் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த கருப்பு கிளிப்பை அகற்றவும்.

கிளிப்

பாசிட்டிவ் முனைகளில் உள்ள சிவப்பு கிளிப்களை அகற்றவும்

பின்னர், இரண்டு கார்களின் பாசிட்டிவ் முனைகளிலும் உள்ள சிவப்பு கிளிப்களை அகற்றவும். கடைசியாக, நல்ல பேட்டரியில் இணைக்கப்பட்டிருந்த கருப்பு கிளிப்பை அகற்றவும். கிளிப்புகள் எதுவும் ஒன்றுக்கொன்று தொடாமல் பார்த்துக் கொள்ளவும். கார் ஸ்டார்ட் ஆன பிறகு, பேட்டரி சார்ஜ் செய்யப்படுவதை உறுதிப்படுத்த, காரை சிறிது நேரம் ஓட விடவும். கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், பேட்டரி பழுதடைந்திருக்கலாம் அல்லது ஆல்டர்னேட்டரில் சிக்கல் இருக்கலாம்.