லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம்
ஆண்டிபட்டியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம். இவர், மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைக்கும் விவகாரம் தொடர்பாக சிலரிடம் பணம் பெற்றதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், "மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்படும் 4 தனியார் கேண்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குங்கள். எங்களால் கேண்டீனை நடத்த முடியவில்லை. நீங்கள் ரூ.10 லட்சம் கேட்டீர்கள். ரூ.6 லட்சம் கொடுத்துவிட்டோம். மீதி ரூ.4 லட்சம் கொண்டு வந்து இருக்கிறோம். வாங்கி கொள்ளுங்கள்" என்று சிலர் முதல்வரிடம் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்டார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். விசாரணையில், டாக்டர்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் பெற்றது உண்மைதான் எனத்தெரியவரவே, அவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.