ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம்
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நேற்று(ஜூலை 31) விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், 3 பேர் கொல்லப்பட்டனர், 10 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் கற்கள் வீசப்பட்டு, கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூஹ் வன்முறை பற்றிய செய்தி பரவியதை அடுத்து, குருகிராம் மாவட்டத்தின் சோஹ்னாவில் ஒரு கும்பல் நான்கு வாகனங்கள் மற்றும் ஒரு கடைக்கு தீ வைத்தது. மேலும் போராட்டக்காரர்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத், நேற்று பிரிஜ் மண்டல அபிஷேக யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த வன்முறையில், பல போலீசார் காயமடைந்தனர்
இந்த யாத்திரையை குருகிராமில் உள்ள சிவில் லைன்ஸில் இருந்து பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த யாத்திரைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நூஹின் கெட்லா மோட் அருகே யாத்திரையை ஒரு குழுவினர் தடுத்து நிறுத்தியதாகவும், யாத்திரை செல்பவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் கார்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல்லப்கரில் வசிக்கும் பஜ்ரங் தள ஆர்வலர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய வீடியோவால்தான் இந்த மோதல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த வன்முறையில், பல போலீசார் காயமடைந்தனர், நீரஜ் மற்றும் குர்சேவக் என்ற இரண்டு ஊர்க்காவல் படையினர் உயிரிழந்தனர். காயமடைந்த மீதமுள்ள போலீசார் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.