LOADING...
குழந்தைகளுக்கான சிரப்பில் விஷம்; தெலுங்கானா அரசு அதிரடி தடை; பெற்றோர்களே உஷார்
தெலுங்கானாவில் சிறுவர்களுக்கான சிரப்பிற்கு தடை

குழந்தைகளுக்கான சிரப்பில் விஷம்; தெலுங்கானா அரசு அதிரடி தடை; பெற்றோர்களே உஷார்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2026
04:45 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம், அல்மாண்ட்-கிட் என்ற சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிரப்பில் எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை, சளி, தும்மல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்காக இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

பின்னணி

நச்சு கலப்பு குறித்த பின்னணி

கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வக அறிக்கையின்படி, இந்த சிரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி நச்சுப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தெலுங்கானா முழுவதும் உள்ள மருந்தகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மருத்துவமனைகள் இந்த குறிப்பிட்ட மருந்தின் கையிருப்புகளை உடனடியாக விற்பனை செய்யாமல் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த மருந்து யாரிடமாவது இருந்தால், அதை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எத்திலீன் கிளைக்கால்

எத்திலீன் கிளைக்கால் என்றால் என்ன?

எத்திலீன் கிளைக்கால் என்பது நிறமற்ற, மணமற்ற மற்றும் இனிப்பு சுவை கொண்ட ஒரு திரவமாகும். இது பொதுவாக வாகனங்களில் உறைபனி எதிர்ப்புத் திரவமாக பயன்படுத்தப்படுகிறது. இது மருந்துகளில் கலக்கப்படுவது மிகவும் சட்டவிரோதமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது. இதன் இனிப்பு சுவை காரணமாகக் குழந்தைகள் இதை எளிதாக உட்கொள்ளும் அபாயம் உள்ளது. இது உடலில் சேர்ந்தால் மிகக் குறுகிய காலத்தில் மரணம் அல்லது நிரந்தர உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Advertisement

அறிகுறிகள்

நச்சுத்தன்மையின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

இந்த நச்சு கலந்த சிரப்பை உட்கொண்டால், ஆரம்பத்தில் போதை ஏறியது போன்ற மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். 12 முதல் 36 மணி நேரத்திற்குள் இது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதித்து இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். 36 மணி நேரத்திற்குப் பிறகு சிறுநீரகங்களைச் சிதைத்து, சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்கும். ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் இது உயிருக்கே உலைய வைக்கும் என்பதால் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Advertisement