பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம்
108 ஆண்டு பழமையானது இந்த கடல் வழி பாலமான பாம்பன் பாலம். இதன் நடுவில் உள்ள தூக்குப்பாலம் அடிக்கடி பழுதடைந்து விடும். இதனால் விபத்துகளை தவிர்க்க சென்னை ஐஐடி பொறியியல் குழுவினர் சென்சார் கருவி ஒன்றினை பாலத்தில் பொருத்தினர். இதன் மூலம் சேதம் அல்லது விரிசல் ஏற்பட்டால் கொடுக்கப்படும் அலெர்ட் கொண்டு பாலத்தினை நாம் சீரமைத்துக் கொள்ளலாம், அதன் படி, பாலத்தில் உள்ள சென்சார் கருவி அதிகாலையில் அலெர்ட் கொடுத்துள்ளது. இதனையடுத்து, பாலத்தில் ஏதோ கோளாறு உள்ளதாக கருதப்பட்டதால் சென்னை, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயில்கள் பாம்பன் பாலத்தை கடக்க தடை விதிக்கப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
கோளாறினை சரிசெய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபாடு
இதனால் பயணிகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து தனியார் வாகனங்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவற்றுள் பயணம் செய்து ராமேஸ்வரம் செல்கின்றனர். மதுரை உள்ள தொழில்நுட்ப அலுவலர்களும், அதிகாரிகளும் பாலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரிசெய்ய முயற்சித்து வரும் நிலையில், அவை சரியாகவில்லை என்னும் பட்சத்தில் சென்னையில் இருந்து ஐஐடி குழுவினர் அங்கு சென்று பாலத்தை சரி செய்த பின்னரே ரயில் சேவைகள் மீண்டும் துவங்கும். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 ரயில்களுக்கு மேல் பாம்பன் பாலத்தில் செல்ல தடை விதித்து நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.