LOADING...
டிசிஎஸ் நாசிக் விவகாரம்: தலைமறைவாக உள்ள HR நிதா கான் குறித்த அதிர்ச்சித் தகவல்
நிதா கான் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன

டிசிஎஸ் நாசிக் விவகாரம்: தலைமறைவாக உள்ள HR நிதா கான் குறித்த அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் மற்றும் மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நிதா கான் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான தகவல்களில் நிதா கான் அந்த அலுவலகத்தின் HR Manager என்று கூறப்பட்டது. ஆனால், அவர் உண்மையில் அந்த நிறுவனத்தில் ஒரு டெலிகாலராக தான் பணியாற்றி வந்தார் என்று பிசினஸ் டுடே ஊடகத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்க முயன்றபோது, "இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் சகஜம் தான்" என்று கூறி அவரை நிதா கான் தடுத்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்ஜாமீன் மனு

நிதா கானின் முன்ஜாமீன் மனு

முக்கியக் குற்றவாளி நிதா கான், தற்போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகிறார். அவர் தனது மனுவில் 'கர்ப்பமாக' இருப்பதைக் முக்கியக் காரணமாக முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் 9 எப்.ஐ.ஆர்களிலும் பெயர் இடம்பெற்றுள்ள 26 வயதான நிதா கான், காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். நிதா கான் தற்போது கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், சிறைவாசம் அவரது உடல்நலத்தைப் பாதிக்கும் என்றும் முன்ஜாமீன் மனுவில் வாதிடப்பட உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் மும்பைக்குக் குடிபெயர்ந்ததாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் மும்பை கிளைக்கு தனது பணியை மாற்றிக்கொண்டதாகவும், எனவே நாசிக் சம்பவங்களில் தனக்கு நேரடித் தொடர்பில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கைகளும் புகார்களும்

இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தனிஷ் ஷேக், தௌசிப் அத்தார், ரசா மேமன் உள்ளிட்ட 7 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். 18 முதல் 25 வயது வரையிலான பெண் ஊழியர்களே இவர்களின் முதன்மை இலக்காக இருந்துள்ளனர். இந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுதல், கட்டாயப்படுத்தி அசைவ உணவு உண்ணச் செய்தல் மற்றும் மதமாற்றத்திற்கு வற்புறுத்துதல் போன்ற செயல்களில் இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டதாக 9 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சர்ச்சையை தொடர்ந்து நாசிக் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற (WFH) அறிவுறுத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், நேற்றைய தினம் சுமார் 60 ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றியதாக தெரிகிறது.

Advertisement