LOADING...
TCS ஊழியர்களுக்கு திடீர் 'WFH' உத்தரவு! நாசிக் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?
TCS ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை WFH செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

TCS ஊழியர்களுக்கு திடீர் 'WFH' உத்தரவு! நாசிக் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO மையத்தில், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாசிக் அலுவலகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு (Work From Home) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புகார்கள்

பாலியல் வன்கொடுமை மற்றும் மதமாற்றப் புகார்கள்

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் சுமார் 12-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தங்களுக்குப் பணியிடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக தனித்தனியாக புகார்களை அளித்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தச் சம்பவங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில பெண் ஊழியர்களை கட்டாயப்படுத்தி மாமிசம் உண்ண செய்ததாகவும், நமாஸ் செய்ய வற்புறுத்தியதாகவும், மதமாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 9 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைது

சிறப்புக் காவல் படை விசாரணை மற்றும் கைதுகள்

இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு இது குறித்து விசாரிக்கச் சிறப்புக் காவல் படையை (SIT) அமைத்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மனிதவள மேம்பாட்டு (HR) மேலாளர் உட்பட 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் ஊழியரும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கான் (Nida Khan) என்ற பெண் அதிகாரி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

நடவடிக்கை

டிசிஎஸ் நிறுவனத்தின் நிலைப்பாடு மற்றும் நிறுவன நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிடத்தில் இத்தகைய அத்துமீறல்களுக்குத் தாங்கள் 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது. புகாருக்குள்ளான அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டு, வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், கார்ப்பரேட் நிறுவனங்களின் உள்நாட்டுப் புகார் குழுக்களின் (Internal Committee) செயல்பாடுகள் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement