ரூ.50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு வரி விலக்கு - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் நேற்று(அக்.,9)துவங்கிய நிலையில், 2ம் நாளான இன்று(அக்.,10)முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண்.,110ன்-கீழ் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வணிகம் செய்வோர் அரசுக்கு வழங்கவேண்டிய வரி, அதன் வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவை நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்து வருகிறது. அதனை செலுத்த சலுகை வழங்க அரசிடம் வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நிலுவைத்தொகையினை வசூலிக்க சமாதான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதன்படி ரூ.50,000க்கும்-கீழ் வரி வட்டி மற்றும் அபராதத்தொகை வழங்க வேண்டிய சிறு-குறு வணிகர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, ரூ.50,000ல் இருந்து ரூ.10 லட்சம் வரை வரி வட்டி மற்றும் அபராதத்தொகை நிலுவை வைத்துள்ளோர் 20% நிலுவைத்தொகையினை செலுத்தினால் போதுமானது என்றும் கூறியுள்ளார்.
நீண்டகால கோரிக்கையினை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய திட்டம்
மேலும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை மற்றும் ரூ.10 கோடிக்கும் மேல் நிலுவை வரித்தொகை வைத்துள்ளவர்களும் குறிப்பிட்ட சதவீத தொகையினை கட்டுவதன் மூலம் நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரும் வகையில் இந்த புதிய சமாதான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக வணிகர்களின் நீண்டகால கோரிக்கையினை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இச்சலுகை திட்டம் வரும் 16ம் தேதி முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, வணிகர்கள் அரசின் இந்த முன்னோடி முயற்சியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.