ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா
இந்தியாவில், ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் மூன்று தைவான் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வந்தது விஸ்ட்ரான் நிறுவனம். 2017-ல் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்நிறுவனம். தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே பல்வேறு நிர்வாகக் கோளாறுகள் இருந்த காரணத்தால் தொடர்ந்து பிரச்சினைகளைத் சந்தித்து வந்தது விஸ்ட்ரான். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு வணிகத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தது அந்நிறுவனம். எனவே, பெங்களூருவில் கோலார் மாவட்டத்தில் உள்ள அந்நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புத் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்கு விஸ்ட்ரான் நிறுவனத்தின் கோலார் தொழிற்சாலை டாடா நிறுவனம் கையகப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
விஸ்ட்ரானின் பெங்களூரு தொழிற்சாலை:
இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று தைவான் நிறுவனங்களே ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற இரு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது அளவில் மிகவும் சிறிய நிறுவனமாகவே இருந்து வந்தது விஸ்ட்ரான். 2020-ம் ஆண்டே சீனாவிலும் ஐபோன் தயாரிப்பு வணிகத்தைக் கைவிட்ட அந்நிறுவனம், தற்போது இந்தியாவிலும் ஐபோன் தயாரிப்பு வணிகத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறது. 600 மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில், 10,000 தொழிலாளர்களுடன் இயங்கி வரும் அந்நிறுவனத்தின் கோலார் தொழிற்சாலையில், ஆப்பிளின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஐபோன் 14 அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையை டாடா கையகப்படுத்தும் பட்சத்தில், ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு வணிகத்தில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா விளங்கும்.