டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, ESI வசதி: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ESI மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். "டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வருகிறோம். அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்". "இந்த ஊதிய உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்த ஊதிய உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.110.74 கோடி செலவினம் ஏற்படும்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
"MRP-க்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை"
ஊழியர்களின் நலனில் அரசு அக்கறை காட்டுவது போல, நுகர்வோரின் நலனும் முக்கியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், சில்லறை விற்பனை குறித்து கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். "டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள MRP விலை என்னவோ, அந்த விலைக்கு மட்டும்தான் மதுபானங்கள் விற்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை உயர்த்தி வழங்கியுள்ள நிலையில், நுகர்வோரிடம் கூடுதல் பணம் வசூலித்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்." மேலும், கடைகளில் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி எங்கும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படாமல் இருப்பதை அரசு முழுமையாக உறுதி செய்துள்ளதாகவும், இத்துறையில் ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.