குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்
தமிழ்நாடு மாநிலத்தில் பண்டையக்காலத்தில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கோட்டைகளை கட்டினர். அதற்குள் எதிரிகள் வராமல் இருக்க கோட்டையினை சுற்றி அகழிகளை அமைத்து அதில் முதலைகள், பாம்புகள் போன்றவற்றை விட்டு வைப்பர். அதன்படி தஞ்சை பெரிய கோவில் சுற்றிலும் இதுபோன்ற அகழிகளை அமைத்துள்ளார்கள். இந்த அகழிகளுக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு, பொதுமக்கள் அதனை கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் தண்ணீர் அகழியில் நிரம்பியிருக்கும் பொழுது அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருவதால், கடந்த 2 ஆண்டுகளாக ஓரளவுக்கே தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதனால் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து அகழி புதர் மண்டி காட்சியளிக்கிறது.
அகழியை சுத்தம் செய்யவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை
சிலர் இப்பகுதிகளில் குப்பைகளை கொட்டவும் செய்கிறார்கள். தொடர்ந்து அகழி கரையோரங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் இந்த இடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. அகழியில் உள்ள நீர் சீக்கிரம் வறண்டு போகிறது. இதனால் அகழிகளில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் நிறைந்துள்ளதால் துர்நாற்றம் வீசப்படுகிறது. இதன் காரணமாக அவ்வழி செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கினை மூடியப்படி கடந்து செல்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகழியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.