தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன்
தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் திமுக இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவி தொகையாக வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் நிதிநிலை நெருக்கடி காரணமாக ஆட்சிக்கு வந்த பின்னரும் அதனை நிறைவேற்றாமல் தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் நடந்த ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பெண்களுக்கு உதவி தொகை வழங்குவது குறித்து பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று(மார்ச்.,20) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இந்த திட்டமானது அண்ணா நினைவு நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரலாற்றுமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறேன் - மு.க.ஸ்டாலின்
இந்த அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்னும் கனவை முன்னெடுத்த முதல் இந்திய கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்த திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமை தொகையாக உருவெடுத்துள்ளது. இதனை கண்டு மகிழ்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர், வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவானது இணையத்தில் தற்போது மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.