தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் எனத் தகவல்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுக எப்போதும் சொன்னதைத்தான் செய்யும் என்றும், ஊடகங்கள் விரும்பும் மாற்றத்திற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என்றும் கூறினார். மாற்றம் ஒன்றே நிலையானது என்று அமெரிக்கா செல்வதற்கு முன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஸ்டாலின் இவ்வாறு கூறினார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் பவள விழா
தனது முந்தைய கருத்தை நினைவுபடுத்தியதோடு, இப்போது மாநில அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, ஸ்டாலின், "முப்பெரும் விழாவின் போது கட்சி தனது 75வது ஆண்டு விழாவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் என்று நான் நம்புகிறேன்." எனக் கூறினார். செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் மற்றும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முப்பெரும் விழாவாக கொண்டாடி வரும் திமுக இந்த ஆண்டு தனது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி முப்பெரும் விழாவோடு கட்சியின் பவள விழாவும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கான நிகழ்ச்சியின்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.