இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வரும் அக்.,9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு அறிவித்தப்படி கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. இது மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் குறுகிய காலமே நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 3ம்-நாளான இன்றோடு(அக்.,11) இக்கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 110 விதியின் கீழ் வணிகர்களுக்காக வரி வட்டியினை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனை தொடர்ந்து அவர், வேளாண் விஞ்ஞானி டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூரிலுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அவரது பெயரினை சூட்டினார்.
தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைப்பு
மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் முதல்வர் இடையே நேருக்குநேர் சவாலுடனான விவாதமும் நடைபெற்றது. தொடர்ந்து, காவிரி விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனிடையே இந்த கூட்டத்தொடரில் மிகை செலவுக்கான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதா குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். இந்நிலையில், 3 நாட்கள் நடந்த இந்த கூட்ட தொடரில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் சட்டசபையினை ஒத்திவைத்தார்.