தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் 1 அன்று தமிழகத்தின் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டினாலும், அடுத்த சில தினங்களுக்குப் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கேரளப் பகுதிகளில் அடுத்த ஓரிரு தினங்களில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.
கனமழை
இன்று 22 மாவட்டங்களில் காற்றுடன் கனமழை
இன்றைய தினம் (ஜூன் 2) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கீழ்க்கண்ட 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதிகள்: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி. கொங்கு மற்றும் மத்திய மாவட்டங்கள்: கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி. வட தமிழகம்: தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. தென் தமிழகம்: மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி.
வெப்பநிலை
ஜூன் 7 வரை தொடரும் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம்
கனமழையின் தாக்கம் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும். ஒட்டுமொத்தமாக ஜூன் 7-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஜூன் 5 வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்பதால் வெயிலின் கொடுமை குறையும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகலாம்.