வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகுது! வானிலை மையம் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் இந்தச் சுழற்சியால், மார்ச் 1 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முன்னறிவிப்பு
மாவட்ட வாரியாக மழை முன்னறிவிப்பு
மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான விபரம் இதோ: மார்ச் 1 - 3: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. மார்ச் 4: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். மார்ச் 5 - 6: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் லேசான மழை தொடரும். மார்ச் 7: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பனிமூட்டம்
உயரும் வெப்பநிலை மற்றும் பனிமூட்டம்
மழை ஒருபுறம் இருந்தாலும், அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக மார்ச் 5 ஆம் தேதி வரை வெயில் சற்று சுளீரென இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸும் பதிவாக வாய்ப்புள்ளது. மழைக்கான வாய்ப்பு சென்னையில் தற்போதைக்குக் குறைவாகவே உள்ளது.